siddhas

Tuesday, 20 January 2015

குணக்குடியாய் விளங்கிய குணங்குடி







ஞானியர் கோவில்கள்




சித்தபுருடர் 'குணங்குடி' மஸ்தான் சாகிபு

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் மதங்களை கடந்த மகத்துவமான ஒரு ஞானி. தனித்துவமான பல ஆழ்ந்த சைவ உட்கருத்துககள் இவரது பாடல்களில் இருக்கும். தாயுமானவர் பாடல்களின் சாயல் இவரது சில பாடல்களில் இருக்கும். 

63 நாயன்மார்களில் ஒருவரான சாக்கிய நாயனார். புத்த மதத்தினராய் இருந்து மதம் மாறாமலேயே சிவனை பூஜித்து. சிவன் அருள், தரிசனம், பெற்றார். அதே போல் இவர். இஸ்லாமியராக இருந்தே தனது சித்தத்தை சிவன் பால் செலுத்தி. சிவனாரின் அருள் பெற்றவர்.

ஏகம் சத் விரோ பஹுதா வதந்தி- ஒரு கடவுளை அறிந்தவர்கள் அவரவர் அனுபவத்திகு ஏற்ப சொல்கிறார்கள்.

மெக்காவில் ஒரு கல்லிற்கு நீர் வார்த்து முத்தம் இட்டு வழிபடுவார்கள். அவ்வாறு வழிபட வேண்டும் என நபி வழி வந்த உமர் அலிக்கு அல்லா கட்டளை இட்டார். அந்த கல் பார்க்க சிவ லிங்கம் போன்றே இருக்கும். அனைத்தும் ஒரே பரம்பொருள் என்பதை உணர நாமும் சித்தர் ஆகவேண்டும் என்று அவசியம் இல்லை. சித்ர்களை நோக்கிய தேடலை உங்கள் அறிவும், காலும் செய்ய ஆரம்பித்தாலே போதும். தொல் உலக மக்களையும் சகோதரர்களாக நினைக்கும் மன பக்குவம் தானாக உங்களுக்கு வந்து விடும்.

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு வடமேற்கில் பத்துக்கல் தொலைவில் அமைந்தது குணங்குடி. நயினார். முகம்மது எனும் தந்தைக்கும், பாத்திமா எனும் தாய்க்கும் 1792-ஆம் ஆண்டில் பிறந்தார். குணங்குடி மஸ்தான் சாகிபு எனப் பிற்காலத்தில் அழைக்கப்பட்டவரின் இயற்பெயர் சுல்தான் அப்துல் காதிர்.

இவரது படைப்புகள்
நிராமயக்கண்ணி
மனோன்மணிக்கண்ணி
அகத்தீசர் சதகம்
நந்தீசர் சதகம்
ஆனந்தக் களிப்பு
பராபரக்கண்ணி

இவரைப் பாராட்டி எழுதப்பட்டவை
குணங்குடி நாதர் பதிற்றுப் பத்தந்தாதி - ஐயாசாமி
நான்மணி மாலை - சரவணப் பெருமாளையர்

குணங்குடியார், அவருக்கென்றே வளர்ந்த தாய்மாமன் மகளை மணம் செய்ய மறுத்தார். அமுதத்துக்கு ஆசை கொண்ட மனம் அற்ப மதுவை அருவருத்தது.

தனது 17-ஆவது வயதில் இவர் முற்றும் துறந்த ஞானி ஆனார்.

இவர் தவம் செய்த இடங்கள்.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையில் 40 நாட்கள் யோக சிஷ்டை. அறந்தாங்கி அருகே கலகம் எனும் ஊர். சதுரகிரி, புறாமலை, நாகமலை, ஆனைமலை, நதிக்கரைகள் என பல்வேறு இடங்களில் சித்தத்தை சிவன் பால் வெய்த்து தவம். சில இடங்களில் வார கணக்கில், சில இடங்களில் மாத கணக்கில், சில இடங்களில் வருடக்கணக்கில். இவர் புரிந்த அற்புத சித்துக்கள் கொஞ்சம், நஞ்சம் அல்ல. அவை அனைத்தையும் இவர் பிறர் துயர் தீர்க்கவே பயன் படுத்தினார். அதை வியாபாரமாக செய்யவில்லை.

மஸ்த் பெயர் காரணம்
பாரசீக மொழியில் மஸ்த் எனும் சொல்லுக்கு போதை, வெறி எனும் பொருள். கொண்ட கொள்கையில் வெறியாகப் பற்றுதியுடன் இருந்தார். மக்கள் அவரை மஸ்தான் என்றழைத்தனர். ஏழு ஆண்டுகள் வடநாடு பயணம் செய்து ஞானோபதேசம் செய்திருக்கிறார். சென்னை திரும்பியவருக்கு ராயபுரத்தில் பாவா லெப்பை ‘தைக்கா’ (ஆசிரமம்) அமைத்துக் கொடுத்திருக்கிறார். ஒன்றரை ஆண்டுகள் அங்கே அவர் யோக நிட்டை புரிந்திருக்கிறார். அந்த ராயபுரத்தின் ஒரு பகுதி தண்டையார் பேட்டை ஆனது. 

குணங்குடி மஸ்தான் சாகிபு எழுதிய தற்போது கிடைக்கும் எழுத்துக்கள் 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களாகும்.

குருவணக்கம் பகுதி பத்துப் பாடல்களைக் கொண்டது. அதில் இவரது குரு முகியத்தீன் அப்துல்காதிர் ஜீலானி அவர்கள் செய்த அற்புதங்கள், அதிசயங்கள் பற்றி வருகிறது. 

கடலில் மூழ்கிய கப்பலைக் கொடிக்கம்பத்துடன் திரும்பி வரச் செய்தது, கம்பத்துடன் ஓடி வந்த ஒரு கப்பலைப் பூனையாகச் செய்தது. கர்ப்பத்தில் இருந்த போது தன்னைக் கொல்லவந்த ஒரு முனியைக் கொல்வதற்காகக் கர்ப்பத்திலிருந்து வெளிவந்து அந்த முனியைக் கொன்று இருதுண்டாக்கிவிட்டு மீண்டும் கர்ப்பத்திற்குள் சென்றது, பிள்ளையைப் பிடித்து சந்நியாசி ஒருவன் தின்றுவிட அப்பிள்ளையை அச்சந்தியாசியின் குடலைக் கிழித்துக்கொண்டு வெளிவரும்படி செய்தது என இவரது குரு அதிசயங்கள் அனைத்தும் இப்பாடலில் பதிவாக முன் வருகின்றன.

மற்றும் அகஸ்திய முனிவர் மீது இவர் பாடிய அகத்தீசன் சதகமும் 100 பாடல்களாலானது. குருவருள்நிலை, தவநிலை, துறவுநிலை, நியமந நிலை, வளிநிலை, தொகைநிலை, பொறைநிலை, காட்சிநிலை, தியானநிலை, சமாதிநிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுகின்றன.

இதைத் தவிர இரண்டிரண்டு அடிகளாலான கண்ணிவகைப் பாடல்களும், பல்வித மனநிலை களையும், உணர்வுச் சூழல்களையும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துகின்றன. நிராமயக் கண்ணி, பராபரக்கண்ணி, ரகுமான் கண்ணி, எக்காளக்கண்ணி, கண்மணிமாலைக் கண்ணி, மனோன்மணிக்கண்ணி, நந்தீஸ்வரக்கண்ணி எனப் பல வகையினங்களாக இக்கண்ணிகள் அமைந்துள்ளன.

குணங்குடியார் எழுத்துத் தொகுப்பும் பதிப்பும்

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களைத் தொகுத்துப் பாதுகாத்து வைத்திருந்தவர்கள் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த சீயமங்கலம் அருணாசல முதலியார். பிறகதனைத் தொகுத்து வெளியிட உதவியவர் சேகனாப் புலவர் என்னும் புலவர் நாயகம் அவர்கள். குணங்குடியாரின் சம காலத்தவரான இவர் பெயர் செய்தப்துல் காதிர் நெய்னார் லெப்பை ஆலிம் என்பதாகும்.

குணங்குடி மஸ்தான் சாகிபுவின் பாடல்களுக் கான விரிவான உரையை இக்காலப்பகுதியில் எழுதியவர் மா.வடிவேலு முதலியார் அவர்கள். 1908-இல் பூ.ச.துளசிங்க முதலியார், விரிவுரை யோடு கூடிய பதிப்பை வெளியிட்டார். 1928-இல் இரண்டாம் பதிப்பை வடிவேலு முதலியார் உரை யுடன் சென்னை ஷாஹுல் ஹமீதியா நிறுவனம் வெளியிட்டது.

1997-இல் வெளியிடப் பட்ட மதுரை காமராசர் பல்கலைக் கழக வெளியீடான சூபி மெய்ஞ்ஞான இலக்கியங்கள் நூலில் குணங்குடி மஸ்தான் சாகிபு பற்றியதொரு விரிவான ஆய்வுரையை டாக்டர் பீ.மு.அஜ்மல்கான் எழுதியுள்ளார்.

1838-ஆம் ஆண்டு தனது 47-வது வயதில் பரிபூரணம் பெற்றவரை தங்கிய இடத்திலேயே நல்லடக்கம் (தறுகா) செய்திருக்கிறார்கள். தொண்டியைச் சேர்ந்தவர் என்பதால் மக்கள் அவரைத் தொண்டியார் என்று அழைத்தத்தால் அவர் வாழ்ந்த இடம் தொண்டியார் பேட்டை – தொண்டையார் பேட்டை ஆகி பின் தண்டையார் பேட்டை ஆனது.

இவர் சூஃபி ஞானி. பேராசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள். சுஃப் எனும் அரபுச்சொல்லுக்கு கம்பளி என்று பொருள், சூஃபித் துறவிகள் முரட்டுக் கம்பளி ஆடைகள் அணிந்தனர் என்கிறார். சித்தர் மரபு, இறைவனை வாலை, மனோன்மணி என்றனர். சூஃபிகள் இறைவனை நாயகியாகப் பாவித்தனர்.

பல் மதத்தவரும் குணங்குடியார் மீது பக்தி கொண்டு ஒழுகி இருக்கிறார்கள். சித்தர் மரபின் சூஃபி ஞானியான மஸ்தான் சாகிபுவை, மகாவித்வான் திருத்தணிகை சரவணவப் பெருமாள் ஐயர் பாடிய நான்மணி மாலையில்,

குருவாய் அடுத்தோர்க்கு அருள் சுரக்கும்
கோதில் குணஞ்சேர் குணங்குடியா’

வேங்கடராயப் பிள்ளைக் கவிராயர் பாடிய அறுசீர்க்கழிநெடியடி ஆசிரிய விருத்தத் தோத்திரப்பா -

‘சொந்த மிலையோ பன்னாளும்
தொழுத திலையோ அடிமையெனும்
பந்த மிலையோ பிள்ளைகளைப்
படைத்த திலையோ வருந்துமவர்
சிந்தை யறியும் செயலிலையோ.

அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.

எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பதை தந்திடுவாய்.

ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.

ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே

வேத மறைப்பொருளை வேதாந்தத்து உட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே

வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள் யாருள்ளார் பராபரமே

அண்ட புவனமுடன் ஆகாசமென்று சும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே

அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும் மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே.

நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே.

இரண்டு வாரங்களுக்கு முன் இவரது அதிஸ்டானம் சென்றேன். அங்கு அடியேன் உணர்ந்த தெய்வீக அதிர்வலையை, என்னை ஈர்த்த காந்த சக்தியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

பல் பிறவி புண்ணியத்தின் பயனாய்
பேரானந்த நிலை உணர்ந்தேன் பராபரமே.

இவர் ஆலயம். தண்டையார் பேட்டையில் பிச்சாண்டி லேந் என்கிற தெருவில் உள்ளது. தண்டையார் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள GRT க்கு எதிரே போகும் தெருவில் போய் வலது பக்கமாக திரும்பினால் இவர் ஆலயத்தை அடையலாம்.


1 comment: