siddhas

Friday, 13 February 2015

அருளை அள்ளி வழங்கும் அரு மருந்து நாயகி




திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. நண்டு பூசித்த ஸ்தலம். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இது 42வது தலம் ஆகும். உடல் நோய்கள் அதுவும் குறிப்பாக சர்ம நோய்களுக்கு மிக சிறந்த பரிகார ஸ்தலம். இங்கு அம்பாள் பெயரே அரு மருந்து நாயகி. சோழ மன்னர் ஒருவரின் நோய்யை இந்த ஸ்தலத்து ஈசனும் அம்பாளும் தீர்கக அவரால் எழுப்பப்பட்ட கோவில் இது. திருந்து தேவன் குடி, நன்டான் கோவில் என்று பல்வேறு பெயர்களில் இந்த ஸ்தலம் அழைக்கப்படுகிறது.



இந்த ஸ்தலத்து ஈசனுக்கு நல்லெண்ணையால் அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பக்தர்களுக்கு கொடுப்பார்கள். அதை நாம் உடலில் பூசி கொண்டு சிறு துளி அதை உண்டால் தோல் வியாதிகள் குணமாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. பழனி நவ பாசான முருகன் போலவே இந்த ஸ்தலத்து சிவ லிங்கத்திலும் பல வித மூலிகைகளின் சூட்சுமங்கள் அடங்கியுள்ளன. உடற்பிணி, மனப்பிணி நீக்கி, மன துயரங்கள் போக்கி, நாம் எண்ணியதை கற்கடகேஸ்வரரும்,  அரு மருந்து நாயகியும் அள்ளி தருகின்றனர். கடக ராசியினர் இந்த ஸ்தலத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு.  இந்த ஸ்தலம் கும்பகோணத்தில் இருந்து 15 கிலோ மீட்டரும், திருவிசைநல்லுரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது.



மருந்து வேண்டில் இவை மந்திரங்கள், இவை
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள், இவை
திருந்து தேவன்குடித் தேவர் தேவு எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே.

   திருஞான சம்பந்தர். 

Thursday, 5 February 2015

நமச்சிவாய வாழ்க- இரண்டு கண்கள் போதுமா


இந்த கண் கொள்ளா காட்சியை  காண நாலாயிரம் கண் படைத்திலனே. அந்த நான்முகனே என்று பாட தோன்றுகிறது. நம்முடைய இரண்டு கண்கள் மட்டும் இதை காண போதுமா. எத்தினை ஆயிரம் கண்கள் இருந்தாலும் போராது.
நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க! 5
வேகம் கொடுத்துஆண்ட வேந்தன் அடிவெல்க!
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய்கழல்கள் வெல்க!
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க!
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க!
சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க. 
 
 தென்னாடுடைய சிவனே போற்றி, என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. 

Tuesday, 3 February 2015

உச்சம் தரும் உச்சிஷ்ட்ட கணபதி வழிபாடு.






மற்ற தெய்வங்களை நாம் வழிபடும் பொழுது கடைபிடிக்க வேண்டிய எந்த ஆச்சார, அனுஷ்டானங்களையும் பிள்ளையார் வழிபாட்டில் நாம் கடைபிடிக்க வேண்டியதில்லை. ஒரு மஞ்சள் உருண்டையை பிடித்து வெய்த்தாலே அதில் விநாயகர் எழுந்தருளி விடுவார். ஆலமரம், அரச மரம், சாலையோரம் என காணும் இடங்களில் எல்லாம் காட்சி அளிப்பவர் விநாயகர். 

 மொத்தம் 32 விநாயகர் வடிவங்களும், அந்த, அந்த விநாயகருக்கு என்று தனி, தனியாக மந்திரங்களும், வழிபாட்டு முறைகளும் உண்டு. 32 விநாயகர்களில் உக்கிரமான விநாயகர் வடிவங்களும் உண்டு. அவற்றில் ஒரு வடிவம் தான் உச்சிஷ்ட்ட கணபதி. முறைப்படி ஒரு குருவிடம் தீட்சை பெற்று இதற்க்கு என்று உரிய விருதங்களை கடைபிடித்து உச்சிஷ்ட்ட கணபதி மந்திர உச்சாடனம் செய்பவர்களுக்கு எண்ணிய காரியம் எளிதில் ஈடேறும், காரிய சித்தி, சமுதாயத்தில் ஒரு மிக பெரிய அந்தஸ்த்து என்று பல கிடைக்கும். அதே சமயம் உச்சிஷ்ட்ட கணபதி மந்திரத்தை உரு ஏற்றுதல் அவ்வளவு எளிதல்ல. ஆனால்? 

உச்சிஷ்ட்ட கணபதி கோவிலுக்கு சென்று நாம் வழிபட  கடுமையான ஆச்சாரங்களையோ, விருதங்களையோ கடைபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. உபாசனை, மந்திர உரு ஏற்றுதல் போன்றவற்றிற்கு தான் அதை செய்ய வேண்டும். இந்த உச்சிஷ்ட்ட கணபதி கோவில் திருநெல்வேலியில் அமைந்துள்ளது. உலகிலேயே பெரிய விநாயகர் கோவில், உச்சிஷ்ட்ட கணபதிக்கு என்று இருக்கும் ஒரே கோவில், 1000 ஆண்டுகள் பழமையான கோவில் என்று பல்வேறு சிறப்புக்களை இந்த ஸ்தலம் பெற்றுள்ளது. 

குருவருளும், திருவருளும் தரும் தை பூச திருநாள்



சந்திரன் கடகத்தில் தனது சொந்த வீட்டில் ஆட்சி பலத்துடன் பூச நட்சத்திரத்தில் இருந்து மகர ராசியில் இருக்கும் சூரியனை  பார்க்கும் நாளே தைப்பூசம். சக்தியின் வெளிப்பாடும், தெய்வாம்சமும் பொருந்திய காலம் தை மாதம். தைப்பூச நாள் சிவன், அம்பாள், முருகனுக்கு  உகந்த நாளாகும். மேலும், ஆன்மிக ஜோதி வள்ளலார் அருட்பெருஞ் ஜோதியில் கலந்து மகா சமாதியான நாளும் இந்நாள்தான். 

சிவபெருமான் தனியாக நடனம் புரிவார்.நடன நிலையில் உள்ள சிவனை, நடராஜர் என வணங்குகிறோம். தைப்பூசத்தன்று உமாதேவியுடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இந்த நிலையை உமா மகேஸ்வரர் என்றழைக்கிறோம். ஆகவே இந்த தைப்பூச திருநாள் சிவசக்திக்கு உகந்த நாளாகும். தேவ குருவான பிரகஸ்பதிக்கு பூசம் நட்சத்திரம் என்பதால் அன்றைய தினம் குரு வழிபாடு செய்வதும் சிறப்பு.


ஆஸ்ட்ரேலியா,மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் என்று பல்வேறு உலக நாடுகளில் இந்த தை பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் முருக பெருமானின் வழிபாடு நடக்கிறது.  வேலை வணங்குவதே வேலை என்று இந்நாளில் மட்டும் அல்லாது எந்நாளும் வழிபடும் அடியார்க்கு இந்நாள் மட்டும் அல்லாமல் எல்லா நாளும் இனிய நாளாகும். குருவருளும், திருவருளும் சேர்ந்து கிட்டும்.


முருக பெருமானின் ஆயிரக்கணக்கான நாமங்களில் முருகன், குமரன், குகன் ஆகிய மூன்று  நாமங்களை மிகவும் சிறந்ததாக அருணகிரி நாதர் கூறுகிறார்.

  முருகன், குமரன், குகன் என்று மொழி.

 2] முருகனிடம் நேரடியாக உபதேசம் பெற்றவர்கள் மூவர். தெய்வங்களில் மஹாதேவன், முனிவர்களில்  அகஸ்தியர், மனிதர்களில் அருணகிரிநாதர்.

3] முருகனின் ஸ்தலங்களில் அடியாக [கால்] விளங்குவது திருவிடைக்கழி, நடுவாக விளங்குவது  திருப்பரங்குன்றம், முடியாக [ அனைத்திற்கும் தலையாய] விளங்குவது திருப்போரூர்.


4]முருகரின் தேவர் படை, சூரனின் அசுரர் படைக்கும் இடையில்  நிலம், கடல், வானம் ஆகிய முப்படை தாக்குதல்களும் நடந்ததாக கந்தபுராணம் கூறுகிறது. அந்த முப்படை தாக்குதல் பற்றிய கந்தபுரான  வர்ணனை தத்ரூபமாக இன்றைய முப்படை தாக்குதல் போலவே ஏற குறைய இருக்கிறது. கடல் வழி  திருச்செந்தூரிலும், தரை வழி திருபபரங்குன்றத்திலும், ஆகாய வழி தாக்குதல் திருப்போரூரிலும்           நடந்தது. 

 5] தரைக்கு எல்லை உண்டு, கடலுக்கும் எல்லை உண்டு, வானத்திற்கு எல்லையே இல்லை. 

6]  உருவாய், அருவாய், உளதாய், இலதாய்
மருவாய், மலராய், மணியாய், ஒளியாய்
கருவாய், உயிராய், கதியாய், விதியாய்
 குருவாய், வருவாய் அருள்வாய் குகனே.

என்னும் இந்த கந்தர் அனுபுதி பாடலை பக்தியோடு ஆறுமுகனைநினைத்து, ஆறுமுறை  சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.

Sunday, 1 February 2015


இன்று நங்கநல்லூர் தேவி கருமாரி அம்மன் கோவிலில் காலை 9- 10 மணியளவில் கும்பாபிஷேகம் நடக்கவிருக்கிறது. 12 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் வைபவம். கும்பாபிஷேகத்தை நாம் காணுவதன் மூலம் அதே கோவிலை தொடர்ந்து 12 வருடங்கள் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். எந்த கோவில் கும்பாபிஷேகமாக இருந்தாலும் அதன் நிறைவு பகுதியில் கருடாழ்வார் கோபுரத்தை வட்டம் இடுவார். நமது கர்ம வினைகளை தொலைக்கும் எளிய வழிகளில் மிக சிறந்த ஒன்று. கும்பாபிஷேகத்தை காண்பது. பல்லாயிரம் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதும் ஒரு கும்பாபிஷேகத்தை காண்பதும் ஒன்று.